GCT தோழனுக்கு ஒரு கடிதம் --- Part 2
முதல் பகுதியை படித்து விட்டுத் தொடரவும் !
தோழனுக்கு ஒரு கடிதம் ! - Part II
****************************************
என் அன்புக்குரிய ப்ரீதம்,
முதலாண்டில் நாம் பயின்ற நேரம், ரேகிங் அதிகமாகவே இருந்தது. கிண்டல், கேலி என்பவை போக, பல சமயங்களில் சீனியர் மாணவர்கள் அடி உதையும் நமக்கு வழங்கினர். மேலும், நமது அறைகளில் இரவு எட்டு மணிக்கு மேல் விளக்கெரிவதற்கு தடா போட்டிருந்தனர். தவறி விளக்கெறிந்தால், ஆர்ப்பாட்டமாக கல் வீசி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து வந்தனர். அதற்கெல்லாம் அசராமல், நம் அறை ஜன்னலுக்கு இரு கெட்டியான போர்வைகளை பாதுகாப்பு அரணாக்கி, நடு இரவு வரை துணிச்சலாக விளக்கை எரிய விட்டு, நீ ஏதாவது படித்துக் கொண்டிருப்பாய். நம் அறையைத் தவிர்த்துப் பார்த்தால், விடுதியே இருளில் மூழ்கியிருக்கும். இதனால், கடுப்பான சீனியர்கள் தொடர்ந்து கல் வீசியதில், நம் அறையின் ஜன்னல் கண்ணாடியை மொத்தமாக இழந்தது! இரு வாரங்களில் கல் வீச்சும் ஒய்ந்து போனது! அதனால், எட்டு மணிக்கு மேல் படிக்க விரும்பிய 'காந்தி' வகை மாணவ நண்பர்கள், நம் அறையை நோக்கி விட்டில் பூச்சிகள் போல் படையெடுத்து நம் உறக்கத்தை கெடுத்தது தான் மிச்சம்!
அது போலவே, சீனியர்களின் அடி உதையை நீ எதிர் கொண்ட விதமும் அபாரமானது. நம் சக மாணவர்கள் சீனியர்களுக்கு அஞ்சி, 6 மணிக்கு மேல் விடுதியை விட்டு வெளியே வர மாட்டார்கள். நீயோ (நடுக்கத்தை வெளிக்காட்டி கொள்ளாத என்னையும் இழுத்துக் கொண்டு!) வேண்டுமென்றே கல்லூரி வளாகத்தில் அங்குமிங்கும் நடை பயில்வாய். அதனால், சீனியர் மாணவர்களின் பார்வையில் விழுந்து, நமக்கு பல தடவை அடி உதை கிடைத்தது. ஆனால், நீ நினைத்தது போலவே, ஒரு கட்டத்தில், அவர்களுக்கே அது அலுத்துப்போய், நம்மை பிடித்துப்போய், சீக்கிரமே சீனியர்களில் பலர் நமக்கு காட்·பாதர்களாகி விட்டனர். இதனால் நம் காட்டில் நல்ல மழை!
சீனியர் மாணவர்களிடமிருந்து பழைய பாடப் புத்தகங்கள் நமக்கு கிடைத்தன. அவ்வப்போது ஹோட்டலில் ஓசிச் சாப்பாடு, திரைப்பட இரவுக்காட்சிகளுக்கு விசேஷ அழைப்புகள், சீனியர் விடுதிகளுக்கு தங்கு தடையின்றி சென்று வர அனுமதி, சீனியர் மாணவிகளுடன் கடலை என்று பல அனுகூலங்கள் வாய்க்கப் பெற்றன. ஒரு முறை, ராகம் (தானம், பல்லவி!) திரையரங்கில் 'முந்தானை முடிச்சு' பார்த்து விட்டு, சீனியர்கள் சிலரோடு நாம் ஜட்கா வண்டியில் விடுதிக்கு திரும்பியது உனக்கும் மறந்திருக்காது என்று எண்ணுகிறேன்!
நீ சற்று வசதியான குடும்பத்தில் பிறந்தவன். மாதத்தின் முதல் தேதிகளில் உன் வீட்டிலிருந்து செலவுக்கு மணியார்டரில் பணம் வந்தவுடன் நீ குபேரனாக உருவெடுப்பாய். நண்பர்கள் எங்களுக்கும் குஷி தான்! பாரி வள்ளலைப் போல் எங்களை அரவணைத்து, சினிமா, ஹோட்டல் என்று வற்புறுத்தி கூட்டிச் சென்று செலவு செய்வாயே! அதனால், மாதத்தின் கடைசி பத்து நாட்களில், டீ/பன் வாங்கக் கூட கையில் காசில்லாமல் குசேலன் போல் காட்சி அளிப்பாய். உன் முகராசியோ என்னவோ, யாராவது ஒருவர் கிருஷ்ணனாக மாறி, அந்த சமயங்களில் உன் தேவைகளை பூர்த்தி செய்வதை நான் பல முறை பார்த்திருக்கிறேன். ப்ரீதம் என்று பெயர் கொண்டதாலோ என்னவோ, கல்லூரியில் பலருக்கும் நீ பிரியமானவனாகத் திகழ்ந்தாய்!
உன்னுடனும், ஷியாமுடனும் பலமுறை சென்றுண்ட ஆர்.எஸ்.புரம் அன்னப்பூர்ணா உணவகமும்,
நாம் தேர்வு சயமங்களில் விஜயம் செய்த, வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்த "அக்ரி" வினாயகர் கோயிலும்,
நாம் ஆங்கிலத் திரைப்படங்கள் கண்டு களித்த சென்ட்ரல் திரையரங்கமும்,
மாலை நேரங்களில் உற்சாகமாக அரட்டை அடித்தபடி, நாம் தேங்காய் பன்னும் தேநீரும் சாப்பிட்ட, தடாகம் சாலைச் சந்திப்பில் அமைந்த டீக்கடையும்
என் ஞாபகத்தில் நினைவுச் சின்னங்கள் போல் குடியேறி விட்டன ! அதே போல், அன்னப்பூர்ணா உணவகத்து basement-இல் இருந்த 'சுகப்ரியா' Bar-யையும் நீ மறந்திருக்க மாட்டாய் தானே ;-)
சென்ட்ரல் திரையரங்கில், "History of the World - I" பார்த்து ரசித்ததும்,
ஸ்ரீவள்ளி டாக்கீஸில் தரையில் அமர்ந்து "கொக்கரக்கோ" படம் பார்த்ததும்,
வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு வேகு வேகென்று மிதித்து மருதமலை கோயில் சென்றதும்,
கொஞ்சமாக பீர் அருந்தி விட்டு நீயும் ஷியாமும் 'கோயில் யானை' சந்திரசேகரையும், 'பத்து' என்னும் பத்மநாபனையும் கலாய்த்ததும்,
எனக்கு சாருவிடம் ஒருவித ஈர்ப்பு இருப்பதாக (கொஞ்சம் இருந்தது!) எனக்குத் தெரியாமல் அவளிடம் சொன்னதில் அவள் என்னைப் பார்க்கும்போதெல்லாம் விநோதமாக நடந்து கொண்டதும்,
ஷியாமுடன் கட்டிய ஒரு பந்தயத்திற்காக, அறிமுகமில்லாத மிக அழகான முதலாண்டு மாணவி (பேர் நினைவிலில்லை!) ஒருத்தியிடம் சென்று, " I love you ! I will wait for your reply till tomorrow!" என்று அவளை அதிர்ச்சியில் உறைய விட்டு விடுவிடுவென்று திரும்பி வந்ததும்,
LP மேடம் வகுப்புகளில் attendance எடுக்கும்போதெல்லாம், "யெஸ், மதாம்!" (பிரெஞ்சில் மேடம் என்பதை 'மதாம்' என்பார்கள்) என்று வெறுப்பேற்றியதும்
மறக்கக்கூடிய விஷயங்களா, நண்பா !
உன் கூடப் பிறந்தவர் யாரும் இல்லாததால், தேர்வுக்கு முன் வரும் 'படிப்பு விடுமுறையில்' முக்கால்வாசி நேரத்தை சென்னையில் என் வீட்டிலேயே கழிப்பாய். என் அம்மா, பாட்டி, தம்பி, தமக்கை ஆகிய அனைவருக்கும் உன் மேல் மிகுந்த அன்பு உண்டு. அதுவும் என் தம்பிக்கு அக்காலத்தில் நீ ஆதர்ச நாயகனாக திகழ்ந்தாய்! என் குடும்பத்தோடு ஒன்றாக அமர்ந்து உண்ணும் (உன் வீட்டில் கிடைக்காத) வாய்ப்பிற்காக, எங்கள் வீட்டின் எளிமையான உணவைக் கூட மிகுந்த மகிழ்ச்சியோடு நீ ரசித்து உண்டதை இன்று எண்ணிப் பார்க்கையில், கண்ணில் நீர் திரையிடுகிறது, நண்பா!
கல்லூரி கலை நிகழ்ச்சி மேடைகளில் நீ பண்ணிய கலாட்டக்களை நமது கல்லூரித் தோழர்கள் இன்றும் மறக்கவில்லை!
என்றென்றும் அன்புடன்
பாலா
--- மடல் இன்னும் விரியும்!
11 மறுமொழிகள்:
GCT-யில் படித்த மக்கள் மறக்காமல் தங்கள் கருத்துக்களை (அல்லது அனுபவங்களை) கூறவும் !!!
GCT யையும் வேளாண் பல்கலை கழகத்தையும் உங்கள் எழுத்தில் நன்றாக பதிவு செய்துள்ளீர்கள். நல்ல இனிய பதிவு.
அனுசுயா,
கருத்துக்கு நன்றி !
கல்லூரி ஞாபகங்கள் என்றுமே நம்மை இளமையாக வைத்திருக்கும்
எனக்கு சோகம் வரும் நேரமெல்லாம் சிறிது கண்களை மூடி கல்லூரி நாட்களை நினைத்துக்கொள்வேன். மனதிற்கு லேசான ஆறுதல் கிடைக்கும்
எல்லாருக்கும் எல்லா நிலைகளிலும் நினைத்துக்கொள்வார்கள்
எப்போதுமே மாணவப்பருவத்திலையே இருக்க கூடாதா என்று
நன்றி நண்பா பழைய ஞாபகங்களை தங்களது பேனாவால் எனது இதயத்தில் கிளறி விட்டதற்காக.
நன்றி, நிலவு நண்பரே ! நலம் தானே ?
என்றென்றும் அன்புடன்
பாலா
நல்ல இனிய பதிவு
//எனக்கு சாருவிடம் ஒருவித ஈர்ப்பு இருப்பதாக (கொஞ்சம் இருந்தது!) //
ம்ம்ம் பாலா, வீட்டுல படிக்க மாட்டாங்களா? :-))),
ஆனா கடைசியில் சோக குண்டுப் போடப்போகிறீர்கள் என்று பட்சி சொல்கிறது.
என்னடா, உஷா "மதாம்" ஐ காணலியே என்று எண்ணியபோது, வந்து உங்கள் கருத்தை சொல்லி விட்டீர்கள் :) நன்றி உஷா.
//ம்ம்ம் பாலா, வீட்டுல படிக்க மாட்டாங்களா? :-))),
//
ஏற்கனவே சொல்லி விட்டேன் !!! எதையும் மறைப்பதில்லை ! "அடங்கொப்புரானே" சத்தியமாச் சொல்றேன் :)
நல்லாருக்கு ஒங்க மலரும் நினைவுகள்
கூடிய சீக்கிரம் நானும் சி.இ.ஜி. அனுபபங்களைப் பற்றிப் பதிவிட நினைத்துள்ளேன்.
இதற்கும் நீங்கள்தான் இன்ஸ்பிரேஷன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
நன்றி, ராகவன் சார் !
மேலும், தமிழ் வலைப்பதிவுலகில் டோண்டுவுக்கே இன்ஸ்பிரேஷன் என்பது பெரிய விஷயமல்லவா :)
தன்யனானேன் !
என்றென்றும் அன்புடன்
பாலா
Post a Comment